பஞ்சமியின் நாயகியே ! – Part 2

varahi

Youtube Link

பஞ்சமியின் நாயகியே வாராகிதேவி !
தாயே ! சிவ ரூபி ! தவ மேனியம்மா !
நெஞ்சமெலாம் கோயில் கொண்ட நீலியம்மா !
நலங்களெல்லாம் தருபவளே சூலியம்மா !
தஞ்சையிலே தனியாக சன்னதி கொண்டாய் !
தஞ்சமென்று வந்தவர்க்கு நிம்மதி தந்தாய் !
நஞ்சையையும் புஞ்சையையும் கொழித்திட செய்வாய் !
நானிலத்தில் பஞ்சமின்றி செழித்திட செய்வாய் !

ஏழு கன்னி தேவியரில் பஞ்சமியானாய்!
ஏழுலகம் காத்தருளும் தண்டினியானாய் !
வீழுகின்ற பகைவருக்கு பயமாகினாய் !
வேண்டுகின்ற பக்தருக்கு அபயமாகினாய் !
வாழுகின்ற வாழ்க்கையிதை தந்தவளானாய் !
வரம்கொடுத்து அருளிடவே வந்தவளானாய் !
பாழும்வினை தீர்க்கின்ற பைரவியானாய் !
பரமனவன் பக்கத்திலே சாம்பவியானாய் !

குங்குமம் என்நெற்றியிலே நிறைய வேண்டும் !
குரோதம், பேராசையெலாம் மறைய வேண்டும் !
சங்கத் தமிழ் மொழியிலுனைப் பாடிட வேண்டும் !
சித்தமெலாம் உன்நினைவே ஓடிட வேண்டும் !
எங்கனுமே அமைதிநிலை சூழ்ந்திட வேண்டும் !
எதிரியெலாம் வழிவிலகி வீழ்ந்திட வேண்டும் !
மங்கலமே வாழ்விலென்றும் பொங்கிட வேண்டும் !
மற்றதெல்லாம் நானுக்கு சொல்லவா வேண்டும் ?

பன்றிமுகம் கண்டவுடன் பக்தி வளருது !
பார்த்திருக்க உள்ளத்தோடு ஆசை மலருது !
கன்றினை போல் தாயுனையே காலும் சுற்றுது !
கரமிரண்டும் உந்தன் திருப்பாதம் பற்றுது !
வென்றிடுவோம் எதிலுமெனும் வீரம் பிறக்குது !
வாராகி பெருமைபாடி நாவும் சிறக்குது !
நன்றியுடன் நீரைமல்கி கண்கள் பனிக்குது !
நலமளிக்கும் உன்நாமம் நெஞ்சில் இனிக்குது !

நோயில்லா வாழ்வதனை வாழ வேண்டும் !
நின்னடியார் நடுவினிலே பழக வேண்டும் !
சேயில்லா மங்கையர்தாய் ஆகிட வேண்டும் !
சுமங்கலியாய் நீளாயுள் தந்திட வேண்டும் !
பேய், பில்லி சூனியங்கள் பயப்பட வேண்டும் !
பேரன்பால் யாவுமெந்தன் வயப்பட வேண்டும் !
தாயுந்தன் தயவென்றும் தங்கிட வேண்டும் !
தருநிழலாய் நின்கழ்லே திகழ வேண்டும் !