ஸ்ரீ ஹயக்ரீவரின் வண்ணமே !

ஸ்ரீ ஹயக்ரீவரின் வண்ணமே !

என் எண்ணம் எல்லாம் வண்ணமே !

காரணம் அது என்னவோ?

வண்ணமாகக் காரணம்…

நாரணன் அவதாரமோ ?

காக்கும் கடவுள் திருமால் கொண்டது
ஈரைந்து அவதாரமே !

அதையும் தாண்டி பெருமை கொண்டது ஸ்ரீஹயக்ரீவ அவதாரமே !

(என் எண்ணம் எல்லாம் வண்ணமே !)

தெள்ளிய வானின் வண்ணமே ! – அலை

துள்ளிடும் ஆழியின் வண்ணமே !

வில்லினை ஏந்திடும் ஸ்ரீஜெயராமனின் வண்ணமே !

நீலமே ! அது நீலமே !

உலகெலாம் அது நீளுமே!

(என் எண்ணம் எல்லாம் வண்ணமே !)

இரவுப் பொழுதின் வண்ணமே ! – மழைக்

கொணரும் முகிலின் வண்ணமே !

புல்லாங்குழல் கொண்ட‌ கோகுலக் கண்ணனின் வண்ணமே !

கருமையே ! அது கருமையே !

உணர்த்திடும் ஒளியின் அருமையே !

(என் எண்ணம் எல்லாம் வண்ணமே !)

சுத்தம் பூசிடும் வண்ணமே ! – நல்

அமைதியும் பேசிடும் வண்ணமே !

புத்தகம் ஏந்திடும் ஸ்ரீஹயக்ரீவனின் வண்ணமே !

வெண்மையே ! அது வெண்மையே !

அவன் மனம் அதுவும் வெண்மையே !

(என் எண்ணம் எல்லாம் வண்ணமே !)