குத்தாலம் ஸ்ரீ பரிபூர்ண விநாயகர் அஷ்டகம்

நூல் மலர்: ஸ்ரீ பரிபூர்ண விநாயகர் அஷ்டகம்

எழுதியவர்: பி.ஸ்ரீதேவிபிரசாத்

1) நிறைவாழ்வு தந்தருளும் நிலவேந்தன் கணபதியே ! மறைபொருளாய் ஆகிநிற்கும் பரிபூர்ண நாயகனே ! குறைகூறும் குரல்கேட்டு கற்பகமாய்த் தருபவனே ! சிறைபட்டேன் உன்னழகில்… சிதம்பரத்தான் திருமகனே ! 2) திருமகனே ! திருக்குமரன் திருமணத்தை முடித்தவனே ! வருபவனே ! வரமருள.. விரைந்திட்டே வாகனம்மேல்..! திருமுருகன் மூத்தவனே ! திருத்துருத்தி ஆண்டவனே ! பேருவகை அடைந்திட்டேன்.. பெற்றதெல்லாம் உன்னருளே ! 3) அருள் பொழியும் மேகம்நீ ! அழகு பரிபூரணனே ! பொருள் பெருக்கும் காரணனே ! போற்றுகிறேன் காத்திடுவாய் ! இருள்நீக்கி ஒளிதந்து… இடர்விலக்கும் திருவிளக்கே ! பேருள்ளம் கொண்டவனே ! பார்காக்கும் வல்லவனே ! 4) வல்லவனே ! உன்நாம வன்மைதனை உணர்ந்திட்டோம்..! நல்லவர்க்கே அருள்புரிவாய் ! நன்மைகளைச் செய்திடுவாய் ! அல்லல்களை நீக்கிடுவாய் ! அகமுவந்து பாடுகிறோம்..! வள்ளலேஉன் திருவடிகள்.. நம்பினார்க்கு துணையாகும் ! 5) துணையாகும் உன்நினைவு தெளிந்திட்டால் அச்சமில்லை ! இணையில்லை வேறொருவர்.. இங்குனக்கு முன்நிற்க…! வினைதீர்க்கும் நாயகனே ! வேழமுகா வந்திடுவாய் ! உனைக்கண்டேன்..எனைமறந்தேன்.. உண்மை பரிபூரணனே ! 6) பரிபூர்ண நாயகனே ! பண்புநலன் தருபவனே ! கரிமுகத்து பாலகனே ! கடைக்கண்ணால் தருபவனே ! ஹரிஹரனின் மூத்தவனே ! அவனிக்கே முதலவனே ! நெறிதவறா உன்னருளே.. நிகழ்த்திடுமே அற்புதங்கள் ! 7) அற்புதங்கள் ஆற்றிடுமே ! அருள்பொழியும் உன்கரங்கள் ! பொற்பதம் பிடித்திட்டேன்… பரிபூர்ண நாயகனே ! நற்கதியைத் தந்திடுவாய் ! நலமருள வந்திடுவாய் ! ஏற்றமுறச் செய்திடுவாய்.. எங்கள் மணிபாலகனே ! 8) பாலகனே ! கணபதியே ! பார்போற்றும் பண்டிதனே ! நீலகண்டன் மைந்தனேநீ நிற்கின்றாய் எம் நெஞ்சில்..! வேலவனின் சோதரனே … வேண்டுவரம் தந்திடுவாயே ! ஆலமரத் தெய்வமேநீ அடியார்க்கு அமிழ்தம்தான் !