ஸ்ரீ சுப்ரமண்ய புஜங்கம் தமிழில்
1)
எப்போதும் சின்னஞ்சிறு பாலகனாய் வடிவம்..
என்றாலும் பெருமலைபோல் தடைகளையும் உடைக்கும்
தப்பாது ஐமுகனாம் அரசிவனும் வணங்கும்
தந்தமுடன் ஒளிர்கின்ற ஆனைமுக ரூபம்
விதி எழுதும் ப்ரம்மன் இந்திரனும் சுரரும்
துதிக்கின்ற கணபதியே மங்கலங்கள்அருள்வாய் ! (2)
2)
ஒலிக்கும் சொல் அறியேன்
அதன் பொருளும் அறியேன்
கவிபுனைய அறியேன்..
உரைநடையும் அறியேன்
ஒளிர் விட்டேன் என்னுள்
உனதாறு முகத்தை..(2)
அதனாலே ஊற்றாய்
வருகிறதே வார்த்தை !
3)
உபநிடத பொருளாம்
உந்தனெழிற் கோலம் !
மயில்மீது ஏறும்
மறையாவின் சாரம் !
தவசான்றோர் உள்ளம்
அது உந்தன் இல்லம் ! (2)
ஜகம்காக்கும் தேவே! நீ
சிவநாதன் செல்லம்!
4)
வந்தென்னைக் காண்பார் !
வந்தபயன் எய்வார் !
என்றொலிக்கும் தொனியில்
எழுந்தருளி நின்றாய் !
நீராடும் கடலின்
கரையருகில் ஆளும் (2)
பார்வதியின் மகனே !
பவித்திரனே ! தேவா !
5)
ஆர்ப்பரித்துக் கடலில்
ஆடிடும் அலைகள்
அடங்கிடுமே அதனுள்
அதுபோல என்னை..
பார்க்கவரும் அடியார்
படும் இன்னல் மறையும் ! (2)
என்றுரைக்கும் குகனே !
உனைமனதில் வைத்தேன் !
6)
மலையேறி எனைக்காண
அடிவைத்த கணமே
தலையாய கயிலாய
மலைசென்ற பலனே !
என்பதுபோல் வாசமிகு
கந்தமலை நின்றாய் ! (2)
சண்முகனுன் நினைவாக
நான்வாழ அருள்வாய் !
7)
பெரும் பாவம் தீர்க்கும்
பெருங்கடலின் கரையாம் !
அருந்தவமா முனியோர்
தவமிருக்கும் தலமாம் !
சுடராகி குகன்நீ
ஒளிர்கின்ற தலமாம் ! (2)
இடர்நீக்கும் தலமாம் !
கந்தமலை தொழுவேன் !
8)
அண்டமிதன் வெப்பம்
அதிலுழலு மென்நெஞ்சம்
தண்டையவை சிணுங்குமுன்
செம்பாதம் தன்னை
வண்டினைப் போலே
சுற்றிவரும்.. அதனால் (2)
என்றென்றும் களித்து
இன்பத்தில் மூழ்க…
9)
பொன்பட்டு ஆடை !
மின்னலென ஒளிரும்
பொன்மயமாம் ஒளியில்
உந்தனிடை மிளிரும் !
சின்னஞ்சிறு மணிகள்
சிணுங்கலுடன் ஆடும் (2)
உந்தனிடை தன்னை
த்யானிக்கிறேன் நான் !
10)
பருத்தநகில் கொண்டவளாம்
குறத்திமகள் வள்ளி
அணைத்ததனால் சிவந்ததுவே
உந்தன்திரு மார்பு !
அரக்கனந்த தாரகனை
தகர்த்ததிண் மார்பை (2)
நினைத்துதினம் எப்போதும்
த்யானிக்கிறேன் நான்
11)
ஞாலத்தை அருளாடி
காக்கின்ற கரமாம்!
காலனையும் வென்று…
இந்த்ரன்பகை கொன்று..!
நான்முகனின் கர்வம்
அடக்கி அருள்செய்த(2)
ஆறிரண்டு திருக்கரத்தை
த்யானிக்கிறேன் நான் !
12)
ஒன்றுக்கு ஆறாய்
சரத்கால சந்திரன்
ஒன்றாக வானில்
களங்கங்கள் இன்றி
ஒளிர்கின்ற போதும்
உன்ஆறு முகத்தின்(2)
மிளிர்வுக்கு நிகரோ!
சம மென்றால் தகுமோ?
13)
எழில்அன்ன நடைபோல்
அழகுகுறு நகையும்
ஒயில்வண்டாய் உருளும்
கடைப்பார்வை அதுவும்
அமுதமழை பொங்கும்
அதரங்களும் கொண்டாய் !(2)
கமலமலர் வதனம்
ஆறினையும் நினைத்தேன்
14)
விழிபன்னி ரெண்டும்
செவிவரையில் நீளும் !
பொழியும்அவை கருணை
நில்லாமல் என்றும் !
பன்னிரெண்டு விழியில்
ஒருகண்ணின் ஓரம் (2)
என்மீது பட்டால்
ஏதும்குறை படுமோ?
15)
“என்னிருந்து பிறந்தாய்
எந்நாளும் நிலைப்பாய் !”
என்றந்த ஈசன்
உச்சிமுகர் சிரத்தை
நவரத்னம் பதித்த
முடிசூடும் சிரத்தை (2)
ஜகம்தாங்கும் சிரத்தை
போற்றுகிறேன் நானே !
16)
ஒளிர்கின்ற முகம்வரையில்
காதணிகள் ஆடும்
ஜொலிக்கின்ற கங்கணங்கள்
திருக்கைகள் சூடும்
இடுப்போடு பட்டும்
கரத்தோடு வேலும்(2)
எடுத்தென்முன் நின்றாய்
முக்கண்ணண் மகனே !
17)
அன்புடனே தந்தை
வாவென் றழைக்க
அன்னைமடி விட்டு
நீயிறங்கி செல்ல
பாசமுடன் ஈசன்
அணைத்துருகும் குமரா ! (2)
பாலகனாய் வடிவை
மனதோடு வைத்தேன்
18)
புலிந்தன்மகள் வள்ளி
உளம்கவர்ந்த குகனே
களித்துமயில் ஏறும்
கந்தகுக நாதா !
தேவர்படை தலைவா
வேலெடுத்த குமரா ! (2)
தாரகனின் பகையே !
காத்திடுவாய் எனையே
19)
புலனடங்கும் போது
உடல்ஓயும் போது
எமன்பயத்தில் தேகம்
நடுங்குகிற போது
நினைவிழந்து கபத்தின்
நுரைதள்ளும் போது(2)
துணையாகி குகனே !
வாஎந்தன் முன்னே !
20)
சினத்தோடு எமதூதர்
“துண்டாக்கு”, “கொளுத்து”
எனஎன்னை துயர்செய்யும்
நேரத்தில் குமரா !
பயமில்லை பயமில்லை
எனசொல்லி நீயும் (2)
மயிலேறி வேலோடு
வந்திடுவாய் அருகில் !
21)
மறுபடியும் மறுபடியும்
இப்போதே உந்தன்
திருவடியை வணங்கிடுவேன்
ஏற்றருள வேண்டும் !
இறுதியிலே உனைஅழைக்கும்
திறனற்று போவேன் ! (2)
இருந்தாலும் கருணையுடன்
நீவருவாய் அன்றே !
22)
சூரபத்மன், தாரகனை
கொடும்சிம்ம வக்த்ரனை
வீரமுடன் வென்றாய் !
எனக்குளே கனக்கும்
பெருந்தாபப் பேயை
அழிக்காமல் உள்ளாய் ! (2)
நானென்ன செய்வேன்?
வேறெங்கு செல்வேன்?
23)
கதியற்ற பேருக்கு
துணையாகும் குகனே !
பொதியாகத் துயரை
சுமக்கின்றேன் நானே !
மனம்வாழும் பிணியே
உனைநினைக்க தடையே ! (2)
உடன்வந்து காப்பாய் !
உமையாளின் மகனே !
24)
கொடும்தொழு நோயும்
எலும்புருக்கி நோயும்
கடும்காய்ச்சல், மூலம்
அடிவயிறு நோயும்
அச்சம்தரும் பேயும்
அகமனது நோயும் (2)
பச்சிலையின் நீறால்
மறைந்தோடிப் போகும் !
25)
எந்தன்விழி உந்தனையே
காணுதல் வேண்டும் !
எந்தன்மொழி கந்தனையே
பாடுதல் வேண்டும் !
எந்தன்செவி உன்புகழை
கேட்டிடவே வேண்டும் ! (2)
எந்தனுடல், உளம்,புலனும்
உந்தனிடம் நிலைக்க !
26)
தவம்செய்யும் முனியோர்
பெரும்பக்தி கொண்டோர்
இவர்வேண்டும் வரங்கள்
தரும்தேவர் உள்ளார் !
எளிதான பக்தர்
அவர்க்கருள குகனே ! (2)
உனையின்றி யாரோ?
உனையின்றி யாரோ?
27)
என்மனைவி, மக்கள்
உறவினர்கள் எல்லாம்
பெண்மணியோ, ஆணோ
உனைத்தொழவே வேண்டும் !
உன்னருளால் குமரா !
நின்புகழைப் பாடி (2)
நின்நினைவில் மூழ்கும்
நிலையதுவே வேண்டும் !
28)
விலங்கினமோ, வானில்
பறக்கின்ற இனமோ
கலக்கம்செய் பிணியோ
விடம்கொண்ட உயிரோ
துயரெனக்குத் தந்தால்
க்ரௌஞ்சமலை உடைத்த(2)
சுடர்வேலால் அவற்றை
துரத்திடவே வேண்டும் !
29)
பிள்ளைகளின் பிழைகள்
பெற்றோர்கள் பொறுத்தல்
இல்லையாஇவ் வுலகில்?
தேவர்படை நாதா !
நானுந்தன் பிள்ளை! நீ
அகிலத்தின் தந்தை ! (2)
என்பிழைகள் பொறுத்து
அருளிடுவாய் குகனே !
30)
கொடிச்சேவல் வடிவே !
குகனேறும் ஆடே !
அடியேந்தும் மயிலே !
சுடரொளிரும் வேலே !
திருச்செந்தூர் நகரே!
திருத்தீர்த்தக் கடலே ! (2)
திருசெந்தில் நாதா !
என்வந்தனங்கள் !
31)
வீடுதரும் சிவன்மகனே
ஜெயமாகட்டும் !
ஈடுஇலா உந்தன்புகழ்
ஜெயமாகட்டும் !
முடிவுஇலா உன்வடிவம்
ஜெயமாகட்டும் ! (2)
யாதுமென ஆனவனே !
ஜெயமாகட்டும் !
32)
புஜங்கமெனும் துதியிதனை
தினம்குகனின் முன்னே
பக்தியுடன் சொல்லிடுவார்
நல்லதெலாம் பெறுவார் !
நல்லதுணை, மக்களுடன்
நீளாயுள் பெறுவார் ! (2)
இறுதியிலே கந்தகுரு
திருப்பதமும் அடைவார் !