ஸ்ரீ பவானி அஷ்டகம் தமிழில்
1)
பெற்றோரும் இல்லை – நான்
பெற்றவரும் இல்லை !
சுற்றோரும் இல்லை !
சிநேகிதரும் இல்லை !
உற்றதுணை இல்லை !
உற்றவரும் இல்லை !
கற்றதுவும் இல்லை !
செய்தொழிலும் இல்லை !
நீமட்டுமே என் கதியே பவானி !
நீமட்டுமே என் கதியே பவானி !
2)
பேராசை கொண்டேன் !
பெரும்மாசு பட்டேன் !
பேரச்சம் கொண்டேன் !
பெருந்துன்பம் கொண்டேன் !
முடிவில்லாக் கடலாம்
புவிமீது வாழ்க்கை !
கொடிதான பற்றின்
சுழலென்னைச் சுற்றி !
நீமட்டுமே என் கதியே பவானி !
நீமட்டுமே என் கதியே பவானி !
3)
தானமும் அறியேன் !
தவவழியும் அறியேன் !
யோகமும் அறியேன் !
தொழும்முறையும் அறியேன் !
மந்திரமும் அறியேன் !
வழிபாடும் அறியேன் !
தந்திரமும் அறியேன் !
துதிசொல்ல அறியேன் !
நீமட்டுமே என் கதியே பவானி !
நீமட்டுமே என் கதியே பவானி !
4)
புண்ணியமும் அறியேன் !
தீர்த்தங்களும் அறியேன் !
ஒன்றெனவே மனதை
நிலைசெயவும் அறியேன் !
முக்திவழி அறியேன் !
மறைகளையும் அறியேன் !
பக்திவழி அறியேன் !
இருந்தாலும் அம்மா!
நீமட்டுமே என் கதியே பவானி !
நீமட்டுமே என் கதியே பவானி !
5)
அல்லோர்கள் துணையில்
தீமைகள் செய்தேன் !
நல்லவழி கர்மங்கள்
செய்யாமல் விட்டேன் !
எப்போதும் தவறான
மொழிபேசி உள்ளேன் !
எப்போதும் தவறாக
விழிபார்த்து உள்ளேன் !
நீமட்டுமே என் கதியே பவானி !
நீமட்டுமே என் கதியே பவானி !
6)
மும்மூர்த்தி ஆன
தெய்வங்கள் பற்றி
என்ஞானம் மிகவும்
குறைவான தாகும் !
சூரியர், சந்திரர்
அவர்மேன்மை அறியேன் !
வேறிங்கு தெய்வங்கள்
நானேதும் அறியேன் !
நீமட்டுமே என் கதியே பவானி !
நீமட்டுமே என் கதியே பவானி !
7)
கடும்சண்டை நேரம்
கொடுந்துன்ப நேரம்
சுடும்தீயி லிருந்தும்
பெரும் நீரிலிருந்தும்
மலை,குன்றால் நேரும்
பெருந்துயரில் இருந்தும்
பகைதன்னில் இருந்தும்
எனைக்காக்க வேண்டும் !
நீமட்டுமே என் கதியே பவானி !
நீமட்டுமே என் கதியே பவானி !
8)
வயதான தாலே
பலவீனம் ஆனேன் !
பயம்காட்டும் பிணியால்
முகம்வெளிர்ந்து போனேன்!
அலையான துன்பக்
கடல்மாட்டிக் கொண்டேன் !
நிலையின்றி இங்கே
நானுடைந்து போனேன் !
நீமட்டுமே என் கதியே பவானி !
நீமட்டுமே என் கதியே பவானி !