ஸ்ரீ ஜெய துர்கா கவசம்
நவராத்திரியின் நாயகி துர்க்கே !
சிவனார் பத்தினி ஸ்ரீ ஜெய துர்க்கே !
கவலைகள் யாவும் தீர்ந்திட உந்தன்
கவசம் படித்தோம் காத்திடுவாயே !
எம்மைக் காத்து அருளிடவே நீ
சிம்மம் ஏறியே சீக்கிரம் வருக !
வருக ! வருக ! தாயே ! வருக !
தருக ! தருக ! நல்லருள் தருக !
யானை அதிலேறி ஐந்திரி வருக !
எருது தனிலேறி மகேஸ்வரி வருக !
கருடன் மீதேறி வைஷ்ணவி வருக !
கணத்தில் மயிலேறி கௌமாரி வருக !
****
நவவடி வாக துர்க்கா வருக !
நலன்களை வழங்க வருக ! வருக !
பகவதி பார்வதி வருக ! வருக !
பரமேஸ் வரியாய் வருக ! வருக !
ஷைல புத்திரி வருக ! வருக !
ப்ரம்ம சாரிணி வருக ! வருக !
சந்திர காந்தா வருக ! வருக !
கூஷ்மாண்டினியே வருக ! வருக !
ஸ்ரீஸ்கந்த மாதா வருக ! வருக !
கார்த்யாயினி, காள ராத்ரி வருக !
ஸ்ரீ மஹா கௌரி வருக ! வருக !
சித்திகள் அருளும் சித்தாத்ரி வருக !
எருமையின் வடிவில் அசுரர்கள் தலைவன்
அருமை தவத்தால் பெருவரம் பெற்றான் !
தன்னை அழித்திட முடியா தென்று
தலைமேல் ஆணவம் ஏறிடத் திரிந்தான் !
தேவரின், மூவரின் ஆற்றலை சேர்த்து
தேவதை “துர்க்கை” நீயென வந்தாய் !
சக்கரம், சூலம், தேவா யுதத்துடன்
உக்கிரமாக போரிட வந்தாய் !
மகிஷனை வதைக்க…மகிழ்ச்சியை நிறைக்க…
மலைமகள் தேவிநீ போர்க்களம் நடக்க
‘கிடு கிடு கிடு’ என நடுங்கிய தண்டம்…
“தக தக தக” ஒளி சூழ்ந்தது எங்கும்
‘சர..சர…சர..’வென உன் சூலமும் பாய
மள மள மள வென சுருண்டனர் பகைவர்
‘தட தட தட’ வென உருண்டது தலைகள் !
“செவ செவ செவ” என சிவந்தது தரைகள் !
ஜெயம் உனக்காகும் ! ஜெய ஜெய துர்க்கா !
என்றே களித்தனர் தேவரும் யாவரும்
‘ஜெய் மகிஷாசுர மர்த்தினி’ என்னும்
கோஷத்தில் அதிர்ந்தது மண்ணும் விண்ணும் !
***
என்றும் சிரத்தினை கபாலினி காக்க !
எழிற்குழல் சடையாள் கூந்தலை காக்க !
துர்க்கையின் குங்குமம் நெற்றியை காக்க !
முக்கண் கொண்டவள் கண்களை காக்க !
இமவான் திருமகள் இமைகளை காக்க !
இருசெவி களையும் யஸஸ்வினி காக்க !
நாசியை நலமுடன் நவதுர்க்கை காக்க !
பேசிடும் வாய்தனை பார்வதி காக்க !
முப்பத் திருபல் காளினி காக்க !
செப்பிடும் நாவினை ஸ்ரீவாணி காக்க !
கன்னமிரண்டும் கௌமாரி காக்க !
சீருடன் தோள்களை கட்கினி காக்க !
பலமுடன் கரங்களை தண்டினி காக்க !
நலமுடன் விரல்களை நீலினி காக்க
தேகத்தை பொலிவுடன் தேஜஸ்வினி காக்க !
இதயத்தை நலமுடன் நாரணி காக்க !
மஹா மாயையள் இன்னுயிர் காக்க !
அங்கங்கள் அனைத்தையும் ஸ்ரீதுர்க்கை காக்க
****
ஸ்ரீ ஜெயா என்னை முன்புறம் காக்க !
ஸ்ரீ விஜயா என்னை பின்புறம் காக்க !
அஜிதா எந்தன் இடப்புறம் காக்க !
அபராஜிதா என் வலப்புறம் காக்க !
தென்புறம் என்னை ப்ராம்மணி காக்க !
வடக்கில் என்னை வைஷ்ணவி காக்க !
கிழக்கில் என்னை ஐந்திரி காக்க !
மேற்கில் என்னை வாருணி காக்க !
எல்லா திசையிலும் சாமுண்டி காக்க
காடுகள் தனிலே வனதுர்க்கை காக்க
ஜ்வாலா துர்க்கை தீயினில் காக்க
காக்க காக்க ஸ்ரீ துர்க்கை காக்க
துன்பம் கொடுக்கும் முன்வினை யாவும்
துர்க்கா என்றால் எனை விட்டோடும்
அச்சம், ஆணவம் இல்லாதொழிய
அனைத்திலும் வெற்றி என் வசமாகும்…
சூழ்ந்தெனை வாட்டும் நோய்வகையாவும்
சூரியனைக் கண்ட பனியினைப் போலே
விரைவாய் நீங்கி நான் குணமாக…
தலைமுறையாக சந்ததி வளர
கலைகளில் திறனும் கல்வியும் பெருக
கால பயமிலா தைரியம் மேவிட
ஞாலம் பயனுற நாளும் வாழ்ந்திட
நவராத்ரி நாயகி ! அம்பிகை துர்க்கே !
நவவடிவாகி நல்லருள் செய்வாய் !
தவமென உந்தன் சிந்தனை கொண்டேன்…
ஏதும் குறையிலா வாழ்வருள் செய்வாய் !
ஞாயிற்றுக்கிழமை நாலரை ஆறு
ராகு காலத்தில் பூஜை செய்து
உன்னை மனதால் வேண்டிடும் போது
விட்டு விட்டு அடியனை விட்டு
எட்டு பத்து அடி வினை ஓடும்..
பற்று பற்று துர்க்கையின் பாதம்
என்றென் மனமும் நின்பதம் நாடும் !
சாந்தமும் நீயே ! உக்ரமும் நீயே !
வேந்தர்க்கும் நீயே ! மாந்தர்க்கும் நீயே !
அற்புதம் நிகழ்த்தும் அம்பிகை நீயே !
அடியனுக் கெல்லாம் துர்க்கா நீயே !
கண்ணிலும், நெஞ்சிலும் உன்னுரு நிறுத்தி
கஷ்டங்கள் யாவும் தீர்த்திட வேண்டி
கவசத்தை உரைத்தேன் காத்திடுவாயே !
*****
வாழ்க ! வாழ்க ! உமையாள் வாழ்க !
வாழ்க ! வாழ்க ! இமவான் மகளே !
வாழ்க ! வாழ்க ! ஸ்ரீ ஜெய துர்க்கே !
வாழ்க ! வாழ்க ! ஸ்ரீ சிவ துர்க்கே!
எத்தனை பிழைகள் நான்செய் திடினும்
அத்தனையும் பொறுத்து தாயாய் இருப்பாய் !
நல்வழி காட்டும் ஒளியெனத் தொடர்வாய் !
எதிர்வந்து வாட்டும் வலியினைக் களைவாய் !
ஸ்ரீ ஜெய துர்க்கா கவசம் இதனை
சமர்ப்பணம் செய்தேன் உன்னரு ளாலே !
ஏற்றருள் செய்வாய் படிப்பவர் க்கெல்லாம்
ஏற்றம் தந்து காத்தருள் செய்வாய்
ஸ்ரீ ஜெய துர்க்கா திருவடி போற்றி !
மகிஷாசுர வத சூலினி போற்றி !
காளி, பவானி, கௌரி போற்றி !
ஆதி சக்தியாம் அம்பிகை போற்றி !
*****
சித்தர்கள் வணங்கும் தேவியே போற்றி !
சித்திகள் அருளும் சக்தியே போற்றி !
வெற்றிகள் கொடுக்கும் துர்க்கையே போற்றி !
வேண்டிய தருளும் வள்ளலே போற்றி !
மங்கலம் தந்திடும் மாகேஸ்வரி சரணம் !
சரணம் சரணம் மலரடி சரணம் !
சரணம் சரணம் துர்க்கா சரணம் !
சரணம் சரணம் துர்க்கா சரணம் !