psdprasad-music.com

புதிய தமிழ் பக்தி பாடல்கள் !

Experience the divine through sacred music and devotional lyrics

ஸ்ரீ சத்யநாராயண கவசம்

🕉️ ஸ்ரீ சத்யநாராயண ஸ்வாமி
Originals

🎵 Watch/Listen on YouTube


 

சத்திய வடிவே ! நாராயணனே !

நித்திய முழுமதி முகம் கொண்டவனே!

உன்னருள் வேண்டி முழுமதி நாளில்

பூஜை செய்தோம் ! ஏற்றருள்வாயே !

 

பௌர்ணமி நாளின்..பூஜை தனிலே..

பரம்பொருள் தேவே ! வருக ! வருக !

வருக ! வருக ! சத்யனே ! வருக !

தருக ! தருக ! சௌபாக்யம் தருக் !

 

சத்ய சாதகா ! வருக ! வருக !

சத்ய போதகா ! வருக ! வருக !

சத்திய ஒளியே ! வருக ! வருக !

சத்திய வழியே ! வருக ! வருக !

*******

சத்ய சீலனே ! வருக ! வருக !

சத்ய ராஜனே ! வருக ! வருக !

சத்திய வேதனே ! வருக ! வருக !

சத்திய பாலனே ! வருக ! வருக !

 

கமல விழிகள் பேரொளி காட்ட

கனிந்தெனைக் காக்க விரைந்தே வருக !

கசடுகள் இல்லாத் தூயவா ! வருக !

கண்ணனாய் வந்த மாயவா ! வருக !

 

ஸ்ரீ விஷ்ணு வடிவே ! வருக ! வருக !

ஸ்ரீ லட்சுமி பதியே ! வருக ! வருக !

மாசிலா மணியே ! வருக ! வருக !

மங்கலம் யாவும் தருக ! தருக !

*******

அன்றொரு நாளில் அந்தணர் ஒருவர்

அழகிய காசியின் வீதியில் திரிந்தார் !

கொன்றிடும் பசியின் கொடுமை தீர்க்க

“கொடுங்கள் ” என்றே யாசகம் வேண்டி…

 

முதியவர் உருவில் திருமால் அவரின்

முன்னே தோன்றி, அவர்நிலை கேட்டார் !

“கதியிலை எனக்கு…உணவினைப் பெறவே

வழியினைச் சொல்வீர் ! என அவர்கேட்க…

 

“சத்ய நாராயணர் பூஜையை செய்தால்

நிச்சயம் நற்பலன் கிடைத்திடும் உமக்கு !

பக்தியாய் பூஜையை செய்வாய்” எனவே

பூஜையின் நெறிமுறை சொல்லியே மறைந்தார்!

 

“விறு விறு” எனவே அந்தணர் அவரும்

மறுநாள் காலை சீக்கிரம் எழுந்து

“தெரு தெரு”வாக யாசகம் செய்து

தொகையினை சேர்த்தார் பூஜை செய்ய…

 

“கிடுகிடு” எனவே தொகைமிக வாக

கிடைத்தது அன்றே ! அதில் பொருள்வாங்கி…

“மிக மிக” பக்தியாய் பூஜையை செய்தே

மீண்டெழுந்தாரே வறுமையி லிருந்து…

 

***************

மகுடம் தரித்தோன் சிரத்தினைக் காக்க !

முழுமதி முகத்தோன் என்முகம் காக்க !

மிளிரும் மேனியன் மேனியைக் காக்க !

மின்னிடத் தோலினை முகுந்தன் காக்க !

 

பேசிடும் வாய்தனை சத்தியன் காக்க !

நாசியை நலமுடன் நாரணன் காக்க !

தாமரை விழியினன் கண்களைக் காக்க !

மாமறை ஒலியினன் செவிகளைக் காக்க !

 

நாரணன் நாமம் நாவினைக் காக்க !

பூரணன் பலமுடன் பற்களை காக்க !

சங்கினை தரித்தோன் கழுத்தினைக் காக்க !

மங்கலக் குரலோன் தொண்டையக் காக்க !

 

மாசிலாத் தூயவன் இதயத்தைக் காக்க !

மார்பினை ஸ்ரீலட்சுமி நாயகன் காக்க !

வாரித் தருபவன் கரங்களை காக்க !

கூரிய அறிவோன் நகங்களைக் காக்க !

 

நாபிக் கமலன் நாபியைக் காக்க !

ஆபத்தில் காப்போன் இடையினைக் காக்க !

வாழைப் ப்ரியனென் வயிறினைக் காக்க !

ஏழைக் கருள்வோன் முதுகினைக் காக்க !

 

கலசத்தில் எழுவோன் குதத்தினைக் காக்க

குலத்தினை வளர்ப்போன் குறிகளைக் காக்க !

கதையினை பிடித்தோன் இருதொடை காக்க !

கருத்துடன் மூட்டுகள் ஸ்ரீபதி காக்க !

 

ஸ்ரீ சத்ய காலன் கால்களைக் காக்க !

ஸ்ரீ சத்ய பாதன் பதங்களைக் காக்க !

ஸ்ரீ சத்ய தேகன் தேகத்தைக் காக்க !

ஸ்ரீ சத்ய ஆன்மன் இன்னுயிர் காக்க !

****

பேதமி லாமல் அனைவர்க்கும் அருளும்

நாதனே வந்து நலமுடன் காக்க !

வரும்பகல் தன்னில் வராகன் காக்க !

அரையிருள் தன்னில் ஸ்ரீஹரி காக்க !

 

ஏமத்தில் சாமத்தில் உத்தமன் காக்க !

தாமதம் நீக்கி சத்தியன் காக்க !

காக்க காக்க நாரணன் காக்க !

நோக்க நோக்க அருள்விழி நோக்க…!

 

தாக்க தாக்க தடையறத் தாக்க !

பார்க்க பார்க்க புண்ணியம் ஆக…

வறுமை நிலையும் முடிவினைக் காண…

அருமைப் பொருட்கள் அவை கைசேர…

 

அழகிய முகத்தில் முறுக்கிய மீசையும்

அருட் திருக்கரத்தில் வில்லும் ஏந்தி

அன்னாவரத்தில் எழுந்தருள் செய்யும்

அற்புத வடிவே ! சத்தியத்தின் உருவே !

 

தாயார் அனந்த லட்சுமி சமேத

வீர வேங்கட சத்ய நாராயணா !

அனுதினம் விரத பூஜை ஏற்பாய் !

 

தேரினைப் போலே ஆலயம் அதிலே

மூவரின் வடிவாய் உறைந்திடும் தேவே !

பாரினில் சத்திய நெறியினைக் காக்க

திரு அவதாரம்செய் திருமால் நீயே !

 

இத்தரை சத்திய பூமியாய் சிறக்க

சத்ய தேவி துணையவளோடு

சத்திய பொருளாய் நீவழிகாட்ட..

ஜகமிது செய்த புண்ணியம் என்ன?

 

************

முழுநிலவான பௌர்ணமி நாளில்

விரதம் இருந்து பூஜை செய்தால்

செல்வம் யாவும் தானாய் சேரும் !

செய்யும் செயல்கள் ஜெயமெனவாகும் !

 

ஏழை எளியோன், செல்வந்தன் என்னும்

ஏற்றத் தாழ்வுகள் ஏதும் இன்றி

யாரும் இந்த பூஜை செய்தால்

கோரும் யாவையும் நடந்திடும் இனிதே !

 

தடைகள் நீங்கி திருமண பாக்யம்

குலமது தழைக்க சந்தான பாக்யம்

பணியில் சிறக்க உத்யோக பாக்யம்

பணிந்தால் வாழ்வில் பெரும் சௌபாக்யம் !

 

சத்ய நாராயணரின் கதையினைப் படிக்க

பூஜையின் பலன்கள் நிச்சயமாகும் !

தரித்திரம் நீங்கி தங்கிடும் செல்வம் !

***************

வாழ்க ! வாழ்க ! சத்தியனே வாழ்க !

வாழ்க ! வாழ்க ! நாரணா வாழ்க !

வாழ்க ! வாழ்க ! கலியுக வரதா !

வாழ்க ! வாழ்க ! கருணையின் வடிவா !

 

எத்தனை வேண்டுதல் வைத்திடும் போதும்

அத்தனையும் ஏற்று வரமருள் செய்வாய்!

மங்கலம் தங்கிடும் வாழ்வினை அருள்வாய் !

சத்தியம் வழுவா நிலையினைத் தருவாய் !

 

ஸ்ரீ சத்ய நாரணன் கவசம் இதனை

சமர்ப்பணம் செய்தேன் உன்னரு ளாலே !

ஏற்றருள் செய்வாய் துதிப்பவர்க்கெல்லாம்

ஏற்றம் தந்து காத்தருள் செய்வாய் !

 

ஸ்ரீ சத்ய நாரணன் திருவடி போற்றி !

மாதவன் மோஹனன் இணையடி போற்றி !

சத்திய விரதன் விரைகழல் போற்றி !

சத்திய தேவன் திருத்தாள் ! போற்றி

*******

 

சத்திய மான மூலா போற்றி !

சத்திய மான சீலா போற்றி !

சத்தி

ய மான தீரா போற்றி !

சத்திய மான வீரா போற்றி !

 

மங்கலம் வழங்கும் மாதவா சரணம் !

சங்கடம் நீக்கும் சத்யனே சரணம் !

சரணம் சரணம் அச்சுதா சரணம் !

சரணம் சரணம் நாரணா சரணம் !