psdprasad-music.com

புதிய தமிழ் பக்தி பாடல்கள் !

Experience the divine through sacred music and devotional lyrics

ஸ்ரீ மகாலட்சுமி சுப்ரபாதம்

🕉️ ஸ்ரீ மகாலட்சுமி
Originals

🎵 Watch/Listen on YouTube


திருமகளே ! திருமாலின் திருமார்பில் உறைபவளே !
அருணனுடன் தேரேறி ஆதித்யன் விரைகின்றான்!
திருநாளாய் புதுநாளை  ஆக்கிடவே வேண்டுமம்மா !
திருவருளைச் செய்திடவே துயில்விடுத்து எழுந்திடுவாய் !

மாதவங்கள் தேவரெலாம் செய்ததனால் வந்தவளே !
பூதலத்தில் செல்வவளம் பூத்திடவே செய்பவளே !
ஆதவனும் ஒளிவீசி கீழ்திசையில் எழுந்தானே !
மாதவனின்  துணைவியளே ! மகாலட்சுமியே விழித்தெழுவாய் !

மலர்மீது மலர்போல மலர்ந்தவளே ! மலர்முகமே !
அலர்மேலு மங்கையளே ! ஆதி லட்சுமி ஆனவளே !
வளர்கின்ற செல்வத்தை வற்றாது தருபவளே !
மலர்ந்ததுவே புதுக்காலை ! மலர்விழிகள் திறந்திடுவாய் !

தேவரெலாம் உனைக்காண விரைந்தோடி வருகின்றார்!
மூவருமே உன்னடிகள் தொழுதிடவே விழைகின்றார் !
நாரதரும் களிப்புடனே நின் துதிகள் இசைக்கின்றார் !
பூ ரதமாய் ஜொலிப்பவளே ! பூரணியே எழுந்திடுவாய் !
விழித்தெழுவாய் ! விழித்தெழுவாய் ! நாரணனின் நாயகியே !
மூவுலகும் மங்கலமாய் செய்திடவே விழித்தெழுவாய் !
ஓம்காரத் திருவுருவே ! ஓம்காரத் திருமகளே !
ஓரக்கண் பார்வையினால் எமக்கருள விழித்தெழுவாய் !

பேரழகின் இலக்கணமே ! பெருமாளின் வலக்கரமே !
கார்வண்ணன் திருமாலை கவர்கின்ற திருமுகமே !
பேர்சொல்லி துதிபாடி பக்தரெலாம் வந்தனரே !
பாரிதனைக் காத்திடவே பொன்மகளே விழித்தெழுவாய் !

சங்குடனே சக்கரமும் தாங்குபவன் துணையவளே !
மங்கையர்கள் பணிந்தேற்றும் மங்கலத்தின் மறுவடிவே !
சந்திரனின் பேரொளியை திருமுகத்தில் கொண்டவளே !
வந்தனங்கள் செய்கின்றோம் ! அதிகாலை விழித்தெழுவாய் !

வண்ணமலர் மொட்டெல்லாம் அழகாக அவிழ்கிறதே !
மன்னவளுன் மேனியிலே சேர்ந்திடவே மலர்கிறதே !
பன்னீரின் மணமெடுத்து பூங்காற்றும் வருகிறதே !
கண்மலரைத் திறவாயோ? ஸ்ரீ லட்சுமி தேவியளே !

நிதியாகும் நவநிதிக்கும் அதிபதியே ! அலைமகளே !
பதியான பெருமானின் மார்புறையும் திருமகளே !
கதியென்று உன்னடியில் அடியார்கள் கிடக்கின்றார் !
எதிராஜவல்லியே ! இப்போதே விழித்தெழுவாய் !

எட்டுவித வடிவான எழிலான திருவுருவே !
எட்டுதிசை எழுந்ததுவே ! ஒளிக்கதவை திறந்தபடி !
பட்டொளியாய் ஒளிர்ந்தவனாம் சந்திரனும் ஒளிகின்றான் !
சட்டெனவே விழித்திடுவாய் ! ஸ்ரீ லட்சுமி தேவியளே !

கடன் தொல்லை தீர்ந்திடவே கருணையினைச் செய்பவளே !
கடல்மீது தாமரையில் கம்பீரம் காப்பவளே !
மடல்பூத்த புதுமலராய் உடல்கொண்ட தேவியளே !
உடனேநீ விழித்தெழுவாய் ! ஸ்ரீ லட்சுமி தாயாரே !

நவகோளும் நின்பெருமை நில்லாமல் பாடுகின்றார் !
தவமுனியோர் மறைஓதி தனைமறந்து நிற்கின்றார் !
பவவினைகள் தீர்ப்பவளே ! நலமெல்லாம் சேர்ப்பவளே !
புவனத்தின் ஈஸ்வரியே ! மஹாலட்சுமியே விழித்தெழுவாய் !

இணையில்லா அருட்கடலே ! இணையடியகள் தொழுகின்றோம் !
துணையாகி வருவாயே ! திருமாலின் துணைவியளே !
நினைக்கின்ற யாவையுமே தந்தருளும் கற்பகமே !
உனைத்தேடி வந்தோமே ! திருமகளே விழித்தெழுவாய் !

உப்பின்றி சமைத்ததனால் உப்பிலியைத் தந்தவளே !
தப்பேது செய்தாலும் தயவோடு காப்பவளே !
ஒப்பில்லா கருணைமிகு இதயத்தைக் கொண்டவளே !
இப்போதே விழித்தெழுவாய் ! ஸ்ரீதேவி தாயாரே !

பூங்கொடியாய் மாலவனின் மார்போடு படர்பவளே !
பாங்குடனே பணிவோரின் பாசத்தை ஏற்பவளே !
தீங்கெல்லாம் தீர்ப்பவளே ! மங்கலத்தை சேர்ப்பவளே !
தூங்குகின்ற லீலையினையே நீமுடித்து விழித்தெழுவாய் !

சீதையென ஸ்ரீராமன் துணையாகி வந்தவளே !
கீதையினை சொன்னவனின் ராதையென வந்தவளே !
கோதையெனும் ஆண்டாளாய் அரங்கனுடன் சேர்ந்தவளே !
மாதவியே ! மணிக்கொடியே ! மலர்விழிகள் விழித்தெழுவாய் !

திருமணத்து தடைநீக்கி யோகத்தை அருள்பவளே !
கருவாக்கி சந்தான பாக்கியமும் தருபவளே !
திருச்செல்வம் சேர்கின்ற பணியமைத்துத் தருபவளே !
திருமகளே ! துயில்நீங்கி களிப்புடனே விழித்தெழுவாய் !

முனகலுடன் அழைத்தாலும் முகமலர்ந்து அருள்பவளே !
உலகமெலாம் காப்பவளே ! உன்னடியை தண்டனிட்டோம் !
கனகமழை பொழிந்தவளே ! காருண்ய பெருங்கடலே !
ஜனகவல்லித் தாயாரே ! ஸ்ரீலட்சுமியே விழித்தெழுவாய் !

திருநின்றவூரினிலே சிவபூஜை செய்தவளே !
திருலோகி ஆண்டவ:ஏ ! திருச்சானூர் தேவியளே !
திருத்தங்கல் ஆலயத்தில் செங்கமல நாச்சியாரே !
கருவூல நாயகியே ! கண்மலர்கள் விழித்தெழுவாய் !

தீபங்கள் ஏற்றுகிறோம் ! பூபாளம் இசைக்கின்றோம் !
பாவங்கள் தீர்ப்பவளே ! பரந்தாமன் அன்பினளே !
லாபங்கள் சேர்ப்பவளே ! ஸ்ரீ லட்சுமி தாயாரே !
தாபங்கள் தீர்த்திடவே ! தயவுடனே விழித்தெழுவாய் !

வறுமையினை விரட்டிடவே வணங்குகின்றோம் உன்னடியே !
பொறுமைமிகு பொன்மகளே ! திறன் மிளிரச் செய்திடுவாய் !
கருமைநிற நாயகனின் கவின்மலரே ! எழிற்குடமே !
அருமைமிகு செல்வமெலாம் அளிப்பவளே ! விழித்தெழுவாய் !

வாரணங்கள் திசைஎட்டும் புடைசூழ வருகிறதே !
பூரண கும்பத்தின் புண்ணியநீர் தெளிக்கிறதே !
காரணமாய் யாவைக்கும் ஆனவளே ! திருமகளே !
நாரணனின் நாயகியே ! ஸ்ரீ லட்சுமி விழித்தெழுவாய் !

நறுமணமாய் திரவியங்கள் சன்னதியில் சேர்ந்ததுவே !
பெருவகையாய் பூஜைக்கு பொருள்பலவும் வந்ததுவே !
குறுநகையால் நரசிம்மர் உக்கிரத்தை தணித்தவளே !
திருமகளே ! அலைமகளே ! ஸ்ரீ லட்சுமியே விழித்தெழுவாய் !

அபார கருணையளே ! அலைமகளே ! மங்களங்கள் !
குபேர அருள்கொடுக்கும் ! குலமகளே ! மங்களங்கள் !

மஞ்சள் குங்குமாய் ஜொலிப்பவளே ! மங்களங்கள் !
தஞ்சம் என்றாரை காப்பவளே ! மங்களங்கள் !

அகலவிழி அழகினளே ! அன்பினளே ! மங்களங்கள் !
சகல ஐஸ்வர்யம் தரும் சௌபாக்ய லட்சுமியே மங்களங்கள் !