ஸ்ரீ துளசி ஸ்தோத்திரம் தமிழில்
1)
மகாவிஷ்ணுவின் அன்பினளே !
ஜகத்தினைத் தாங்கும் தேவியளே !
துளசி தேவிஉன் துணையால்தான்
மூவரும் முத்தொழில் செய்வாரே !
2)
செல்வமும் முக்தியும் அருள்பவளே !
வாழ்வில் மங்கலம் தருபவளே !
மங்கல வடிவாய் ஆனவளே !
மகாவிஷ்ணு ப்ரிய துளசியம்மா !
மகாவிஷ்ணு ப்ரிய துளசியம்மா !
3)
உன்னை நினைந்துன் துதிபாடி
போற்றுவார் புனிதர் ஆவாரே !
என்னை என்றும் காப்பாயே
ஆபத்து நிலைகளில்.. துளசியம்மா !
4)
ஒழிந்திடும் உலகியல் பாவங்கள்
உன்னைக் காணும் போதினிலே !
ஒளிர்ந்திடும் துளசி தேவியளே !
சிரம்பணிந் துனையே வணங்குகிறேன் !
சிரம்பணிந் துனையே வணங்குகிறேன் !
5)
அசையும், அசையா உயிர்களையே
காத்திடும் துளசி தேவியளே !
உன்னைப் பார்த்தால் பாவியரின்
பாவங்கள் யாவும் தீர்ந்திடுமே !
6)
கைகள் கூப்பி உனைத்தொழுவார் !
கலியுகம் இதிலே கரைசேர்வார் !
வைசியர், மங்கையர், எவரெனினும்
வாழ்வில் இன்பங்கள் தானடைவார் !
7)
ஹரியின் அடிகளைத் தொழுவதனால்
புனிதர் ஆகிடும் வைஷ்ணவர்போல்
அகிலத்தை புனிதம் செய்கின்ற…
துளசி உனைப்போல் தெய்வமிலை !
8)
விஷ்ணு பகவானின் சிரத்தினிலே
துளசியை சாற்றிட.கலியுகத்தில்..
கஷ்டங்கள் தீர்ந்து வரங்கள்பல
கைகூடும் உன் ஆசியினால்…
கைகூடும் உன் ஆசியினால்…
9)
தெய்வங்கள் எல்லாம் உன்னுள்ளே
உறைவார் என்பதால் துளசியம்மா…
உன்னை வணங்குதல் மற்றெல்லா
தெய்வங் களையும் வணங்குதல்போல்..
10)
மாலவன் அன்பிற் குரியவளே !
யாவும் அறிந்த… துளசியம்மா !
பாவங்கள் எல்லாம் தீர்த்தெனக்கு
பாக்கியம் யாவும் சேர்த்திடுவாய் !
பாக்கியம் யாவும் சேர்த்திடுவாய் !
11)
புண்டரீகன் என்னும் அறிவாளன்
துளசியை சாற்றி அனுதினமும்
முந்தைய நாளில் ஸ்ரீஹரியைத்
தொழுதான் துதியிதை சொன்னபடி !
12)
வித்யா,அவித்யா, யஷஸ்வினி
மகா லட்சுமி, ஸ்ரீ துளசி !
தர்மமே ! தர்மத்தின் திருமுகமே
தேவரின் அன்பினள் தேவியளே !
தேவரின் அன்பினள் தேவியளே !
13)
லட்சுமியின் சிநேகிதி, ஸ்ரீதேவி !
விண்ணும், மண்ணும் ஆனவளே!
அசையும், அசையா பொருள்வடிவே !
என்றுன் நாமம் பதினாறை…
14)
பக்தியாய் சொல்வார் எவரெனினும்
விஷ்ணு பகவானின் பதம்சேர்வார் !
வந்தனம் ஹரிப்ரிய துளசியம்மா !
வந்தனம் பத்மினி, ஸ்ரீலட்சுமி !
வந்தனம் பத்மினி, ஸ்ரீலட்சுமி !
15)
நாரத முனியும் துதித்தவளே !
நாரணன் துணையே ஸ்ரீ துளசி !
பாவங்கள் தீர்த்தே மங்கலங்கள்
அருளிட வேண்டும் வணங்குகிறேன் !
மங்கலம் அருளிட வேண்டுகிறேன் !