ஸ்ரீ துர்க்கா பஞ்சரத்னம்

1)
தவத்தாலே யோகநிலை
அடைவோர்க்கு நீமட்டும்
கவசமென நற்குணங்கள்
கொண்டவளாய்த் தெரிகின்றாய் !
சிவனுக்கே சக்திதரும்
சக்தியென சிறக்கின்றாய் !
முக்தி தரும் ஈஸ்வரியே !
எனைக் காத்து அருள்வாயே !
2)
துதிக்கின்ற தேவர்களின்
துடிக்கின்ற இதயத்தில்
உதிக்கின்ற சத்தியமாய்
உருகொண்ட துர்க்கையளே !
துதித்துன்னை மறைபாடும்
தெய்வீக சக்தியளே !
முக்தி தரும் ஈஸ்வரியே!
எனைக் காத்து அருள்வாயே !
3)
உபநிடதம் கொண்டாடும்
உமையாளே! ஸ்ரீ துர்க்கே !
பரமசிவன் இடத்தினிலே
பராசக்தி ஆனவளே !
அனைத்திற்கும் அடிப்படையாம்
ஆதாரம் ஆனவளே !
முக்தி தரும் ஈஸ்வரியே!
எனைக் காத்து அருள்வாயே !
4)
மறையாவும் உரைக்கின்ற
“அநாகத” ஒலியும்நீ !
இறையோனின் ஆத்மாவின்
ஒலிவடிவ சக்தியும்நீ !
“பிணை”என்னும் பற்றுதலை
அறுப்பதிலே வல்லாள்நீ !
முக்தி தரும் ஈஸ்வரியே!
எனைக் காத்து அருள்வாயே !
5)
ப்ரம்மநிலை அடைந்திடவே
வழியாகும் மயிலாளே !
ப்ரம்மமென கீதையிலே
சொன்னதுவும் உன்னுருவே !
படைப்பென்னும் லீலைசெய்
மெய்ஞ்ஞான ரூபிணியே !
முக்தி தரும் ஈஸ்வரியே!
எனைக் காத்து அருள்வாயே !