ஸ்ரீ சூர்ய கவசம் – தமிழில்

எழுதியவர் (சமஸ்க்ருதம்) : யாக்ஞவல்க்ய ரிஷி
தமிழாக்கம்: ஸ்ரீதேவிபிரசாத்
***********************************************************
முனியோரில் சிறந்தவரே ! கேளுங்கள் ! மிகப்
பணிவோடு சூரியன் கவசமிதை சொல்வார்க்கு
ஆரோக்யம் நலமாகும்…
சகல சௌபாக்யங்களும்…வசமாகும்…
மகர குண்டலமுடன் ஒளிரும் மகுடம் கொண்ட
ஆயிரங் கிரணனே போற்றி !
பாஸ்கரன் எந்தன் சிரத்தினைக் காக்க !
பெரும் ஒளி கொண்டோன் நெற்றியைக் காக்க !
பகலவன் எந்தன் செவிகளைக் காக்க !
பகலின் மாமணி கண்களைக் காக்க !
வேத வாகனன் முகத்தினைக் காக்க !
தேவர்கள் தொழுவோன் கழுத்தினைக் காக்க !
அறவழி காப்போன் நாசியைக் காக்க !
ஆணவம் அழிப்போன் நாவினைக் காக்க !
புலன்கள் ஐந்தையும் ப்ரபாகரன் காக்க !
ஜனங்களின் பிரியன் மார்பினைக் காக்க !
பன்னிரு ஆத்மன் பாதங்கள் காக்க !
என்னங்கம் தெய்வத்தின் தெய்வம் காக்க !
சூரிய கவசம் துதியாம் இதனை
பூச்ச இலையில் எழுதிக் கொடுத்தால்
மந்திர சக்திகள் தன்வசமாகும் !மகிமைகள் செய்யும் ஆற்றல் சேரும் !
நீராடி காலையில் அனுதினம் சொன்னால்
மாறாத அமைதியில் மனம் நிலையாகும் !
நோய்கள் நீங்கி ஆரோக்யம் மிளிரும் !
ஆயுளும் நீளும் நிச்சயமாக…!