psdprasad-music.com

புதிய தமிழ் பக்தி பாடல்கள் !

Experience the divine through sacred music and devotional lyrics

மீனாட்சி பஞ்சரத்னம்

🕉️ அம்பாள் / தேவி
Translations

🎵 Watch/Listen on YouTube


 

1)

மிளிரும் மஞ்சள் ஆடையுடன்

  மாலைகள், நகைகள் பலசூடி,

ஒளிரும் சூரியன் ஆயிரமாய்

  ஜொலிக்கும் தாயே ! மீனாட்சி !

புன்னகை சிந்திடும் திருமுகத்தில்

  சுந்தர மான பல்வரிசை !

செந்நிற கொவ்வை அதரங்களும்

 சேர்ந்ததோர் அழகு பதுமையளே !

இந்திரன், ப்ரம்மா, திருமாலும்

  உந்தன் மலர்பதம் தொழுவாரே !

மங்கல வடிவின் சாரமென

   மகிழும் பரம்பொருள் ஆனவளே !

 

Chorus:

கருணைக் கடலே மீனாட்சி

  வணங்கினேன் உனையே மறுபடியும் !

கருணைக் கடலே மீனாட்சி

  வணங்கினேன் மறுபடி மறுபடியும் !

 

2)

 

முத்தணி பூண்ட திருமார்பும்

  முழுநில வான திருமுகமும்

ரத்தினம் ஒளிரும் மகுடமுமே

  ரம்மிய அழகாய் ஒளிர்ந்திடுமே !

திருப்பதம் சூடிய கொலுசுமணி

  தாமரை மலராய் ஒளிவீசும் !

விரும்பிடும் யாவையும் தந்திடுமே!

  வேண்டிய தருளும் மலர்பதமே !

கலைமகள், திருமகள் இருவருமே

  களிப்புடன் உன்னைத் தான்சூழ

மலைமக ளாக வருபவளே !

  மங்கல வடிவாய் ஆனவளே !

 

Chorus:

கருணைக் கடலே மீனாட்சி

  வணங்கினேன் உனையே மறுபடியும் !

கருணைக் கடலே மீனாட்சி

  வணங்கினேன் மறுபடி மறுபடியும் !

 

3)

 

ஹ்ரீமெனும் மந்திர வடிவாகி

  சிவனார் இடப்புறம் நின்றவளே !

ஸ்ரீசக்ர நடுவும் நீதானே !

  ஸ்ரீவித்யா வடிவும் நீதானே !

பிந்துஸ்தான மண்டலத்தில்

  திதிதே வதைகள் சூழ்ந்திடவே

சுந்தர மாக நடுவினிலே

  உறையும் தேவி நீதானே !

கந்தன், கணபதி அன்னையளே !

  அண்டம் இதற்கே அன்னையளே !

மந்திர லீலைகள் அதனாலே..

  மனங்களை கவரும் மலைமகளே !

 

Chorus:

கருணைக் கடலே மீனாட்சி

  வணங்கினேன் உனையே மறுபடியும் !

கருணைக் கடலே மீனாட்சி

  வணங்கினேன் மறுபடி மறுபடியும் !

 

4)

 

எழில்மிகு அன்னையே! உன்கோலம்

  கண்டதும் அச்சங்கள் தீர்ந்துவிடும் !

அழிந்திடும் பாவங்கள் அவையாவும் !

  அற்புத ஞானம் கைகூடும் !

கார்நிற தேவிநின் பதங்களையே..

  பூவினன் பிரமனும் போற்றுவது

நாரணன் சோதரி ஆனவளுன்

  வான்புகழ் தன்னைக் காட்டிடுமே!

வீணை,ம்ருதங்கம், குழலிசையும்

  தேவி!உந்தன் மனம் கவரும் !

லீலை செய்து பலவடிவாய்

  தாயாய் தோன்றும் தேவியளே !

 

Chorus:

கருணைக் கடலே மீனாட்சி

  வணங்கினேன் உனையே மறுபடியும் !

கருணைக் கடலே மீனாட்சி

  வணங்கினேன் மறுபடி மறுபடியும் !

 

5)

 

உட்பொருள் என்றே தானாகி

  உலகெலாம் நிறைந்தே இருப்பவளே !

அற்புத நாத ப்ரம்மமென

  உயிர் நாடியாய் உறைபவளே !

நறுமண மலர்கள் பலவிதமாய்

  நிறைந்தே இருக்கும் உன்னடியை

திருமால் அவரும் பணிந்திடவே

  திகழ்ந்திடும் கயல்விழி அன்னையளே !

முனியோர், ரிஷிகள், யோகியரும்

  உள்ளக் கோயிலில் உனைத்தொழுவார்

கனிவாய் அவருக்கு தாயேநீ

   சித்திகள் யாவும் அருளிடுவாய் !

 

Chorus:

கருணைக் கடலே மீனாட்சி

  வணங்கினேன் உனையே மறுபடியும் !

கருணைக் கடலே மீனாட்சி

 

  வணங்கினேன் மறுபடி மறுபடியும் !

  வணங்கினேன் மறுபடி மறுபடியும்