மஹிஷாசுரமர்த்தினி – தமிழ் பாடல் வடிவில்
விந்தய மலையதன் உச்சி உறைந்து இத் தாரணி மகிழ்வுறச் செய்பவளே !
இந்திரன், நந்தியும் போற்றிடும் நந்தினி ! விஷ்ணுவின் சோதரி ஆனவளே !
சங்கரன் துணைவியே ! சகமெலாம் குடும்பமாய்க் கொண்டருள் செய்திடும் பகவதியே !
ஜெயம் உனக்கே ! மஹிஷாசுரன் வதம்புரி எழிற்குழல் சடையாள் மலைமகளே
2)
மூவுல கங்களும் பாலனம் செய்பவள், தேவர்க்கு வரம் தரும் தேவியளே !
தானவர் கோபமடக் கினள், அசுரரின் ஆணவம் அதனை உடைத்தவளே !
பரமனின் அன்பினள், பாவம் அறுப்பவள், தீயவர் தீமொழி பொறுப்பவளே !
ஜெயம் உனக்கே ! மஹிஷாசுரன் வதம்புரி எழிற்குழல் சடையாள் மலைமகளே !
3)
அண்ட சராசரம் காத்திடும் அன்னையே ! இன்பமே விரும்பிடும் ஈஸ்வரியே !
கொண்ட தோர் போரினில் கைடபன், மதுவினைக் கொன்றவளே ! பரமேஸ்வரியே !
இமயமா மலையதன் நடுவினில் மகுடமாய்.. மதுர மயம்கொண்ட மேனியளே !
ஜெயம் உனக்கே ! மஹிஷாசுரன் வதம்புரி எழிற்குழல் சடையாள் மலைமகளே !
4)
கஜமுக அசுரனின் மண்டையை ஒருசத துண்டமாய் விண்டே பிளந்தவளே !
BHUஜமெனும் தண்டத்தால் சண்டனை, முண்டனை வதமுடித் தேதான் நின்றவளே !
முண்டனின் துதிக்கையை துண்டுகள் செய்தவள் சிங்கத்தில் வந்திடும் சங்கரியே !
ஜெயம் உனக்கே ! மஹிஷாசுரன் வதம்புரி எழிற்குழல் சடையாள் மலைமகளே !
5)
தீயன செய்திடும் பகைவரை அழித்திடும் பேரிறை ஆற்றலைக் கொண்டவளே !
பேய்களின் உடனுறை பரமனாம் சதுரனை தனக்கொரு தூதனாய்க் கொண்டவளே !
DHAனவர் தூதனாம் சும்பனை மடித்தவள், ஆணவம் அழித்தவள் அந்தரியே !
ஜெயம் உனக்கே ! மஹிஷாசுரன் வதம்புரி எழிற்குழல் சடையாள் மலைமகளே !
6)
பகைவரின் தலைவர்கள் தலைகளைத் தகர்த்தவள், கரத்தினில் சூலமும் கொண்டவளே !
பகைவரின் மனைவியர் சரணென வந்திட அபயக்கரமருள் செய்தவளே !
DHUமிDHUமி எனுமொலி வெற்றியை முழங்கிட திக்கெலாம் அதிர்ந்திட வருபவளே !
ஜெயம் உனக்கே ! மஹிஷாசுரன் வதம்புரி எழிற்குழல் சடையாள் மலைமகளே !
7)
ஓமெனும் கணத்திலே தூம்பரலோசனை ஒருசதத் துகளாய் செய்தவளே !
ஓடிடும் குருதியில் உயிர்பெறும் அசுரனின் குருதியின் ஈரத்தைக் காய்த்தவளே !
சும்ப, நிசும்பனை வேள்வியில் வார்த்ததால், பேய்களை மகிழ்வுறச் செய்தவளே !
ஜெயம் உனக்கே ! மஹிஷாசுரன் வதம்புரி எழிற்குழல் சடையாள் மலைமகளே !
8)
எய்திடும் கணைகளின் அசைவினுக் காடிடும் கங்கணம் கரத்தினில் தரித்தவளே !
பொன்னிற அம்புகள் செந்நிறம் ஆகிடும் பகைவரின் தலைகளை தகர்த்ததிலே !
சதுரங்கம் போல்பகை நாற்புறம் சூழினும் எதிரிகள் தோற்கவே செய்பவளே !
ஜெயம் உனக்கே ! மஹிஷாசுரன் வதம்புரி எழிற்குழல் சடையாள் மலைமகளே !
9)
போரினில் ஒலித்திடும் “தா-தயி’ எனுமொலி தேவியர் நாட்டியம் ஆடிடவே !
“கூ-குத கூ-குத” எனுமொலி கேட்டந்த வானவர் பண்களைப் பாடிடவே !
“தூ-குட தூ-குட” எனுமொலி பிண்ணணி மிருதங்க வாத்யமாய் இசைத்திடவே !
ஜெயம் உனக்கே ! மஹிஷாசுரன் வதம்புரி எழிற்குழல் சடையாள் மலைமகளே !
10)
ஜெயஜெய எனஉரை செய்திடும் ஜகமிது போருக்கு முன்னரும், பின்னருமே !
‘ஜனஜன’ எனுமுன் கங்கண ஒலியினில், பரமனும் பேய்களும் மகிழ்ந்திடுமே !
அரசிவன் பாதியாள், ஆடவர், பெண்டிரும் நாட்டியம் ஆடிட பாடலுமே !
ஜெயம் உனக்கே ! மஹிஷாசுரன் வதம்புரி எழிற்குழல் சடையாள் மலைமகளே !
11)
இரவினில் ஒளிர்ந்திடும் நிலவதன் அழகினை ஒளிந்திடச் செய்திடும் பேரழகே !
அழகிய திருவுரு, இனியதோர்நல் மனம் கொண்டு மிளிர்ந்திடும் சுந்தரியே !
கண்டு களித்திடும் உன்கரு கண்களைக் கண்டதில் வண்டுகள் தோற்றிடுமே !
ஜெயம் உனக்கே ! மஹிஷாசுரன் வதம்புரி எழிற்குழல் சடையாள் மலைமகளே !
12)
போரினில் வீரரை பூப்படை யோடெதிர் கொண்டு வென்றிடும் வெற்றியளே !
பீலின கன்னியர் பூங்கொடி போலுனைச் சூழ்ந்திட வந்திடும் சக்தியளே !
மலர்களை விரித்திடும் விடியலின் செந்நிறம் போலெழில் புன்னகை கொண்டவளே !
ஜெயம் உனக்கே ! மஹிஷாசுரன் வதம்புரி எழிற்குழல் சடையாள் மலைமகளே !
13)
கஜமத நீர்வடி வாரணம் போலருள் ஒழுகிடும் அற்புதத் திருவுருவே !
ஜகமிது மூன்றுக்கும் அணிகலன் ஆகிய கலைகளும், பலமும் தருபவளே !
பெண்களும் மயங்கிடும் புன்னகை கொண்டவள் மன்மத ராஜனின் குமரியளே !
ஜெயம் உனக்கே ! மஹிஷாசுரன் வதம்புரி எழிற்குழல் சடையாள் மலைமகளே !
14)
கலைநய மிகுதியாய் வடித்த எழில்மிகு கமல மலர்மடல் நெற்றியளே !
கலைகளின் காரணி அன்னத்தின் நடையினைப் போலசைந் தாடிடும் பூரணியே !
சடைகுழல் அழகது வண்டுகள் மொய்த்திடும் வகுளமலர்போல் பூத்திடுதே !
ஜெயம் உனக்கே ! மஹிஷாசுரன் வதம்புரி எழிற்குழல் சடையாள் மலைமகளே !
15)
நடமிடும் விரல்களில் வரும்குழல் ஒலியினில் குயில்களும் நாணம் கொள்கிறதே !
மனம் மகிழ் கானங்கள் பாடிவரும் வழி, மலர்வனம் மலையினில் ஆனதுவே !
குணநலன் கொண்டவர் மலைக்குல மாதர்கள் உடன்விளை யாடிடும் குணவதியே !
ஜெயம் உனக்கே ! மஹிஷாசுரன் வதம்புரி எழிற்குழல் சடையாள் மலைமகளே !
16)
மெல்லிடை சூடிய பட்டுடை மின்னிட முழுமதி தண்ணொளி தோற்றிடுமே !
தேவரும் அசுரரும் பணிந்திடும் திருப்பதம் ரத்தினத் தாலே ஜொலித்திடுமே !
மலைநிகர் ஆணவம் ஓங்கிய தலைகளை பொங்கிடும் கருணையால் வென்றவளே !
ஜெயம் உனக்கே ! மஹிஷாசுரன் வதம்புரி எழிற்குழல் சடையாள் மலைமகளே !
17)
ஆயிரம் ஆயிரம் பகைவரை வென்றவள், ஆயிரம் கரங்களைக் கொண்டவளே !
தாரகா அசுரனைப் போரிட வேண்டியே கார்த்தி கேயனைச் செய்தவளே !
உலகியல் சுகவழி, தெய்விக வளர்வழி இரண்டையும் விரும்பிடும் உமையவளே !
ஜெயம் உனக்கே ! மஹிஷாசுரன் வதம்புரி எழிற்குழல் சடையாள் மலைமகளே !
18)
கருணையின் வடிவமாம் கமலமலர்பதம் அதைதினம் பணிபவர் வாழ்வினிலே…
பெருகிடும் செல்வமும் வளங்களும் என்றும், ஸ்ரீ லட்சுமி அவள் மகிழ்ந்திடவே !
திருவடி உனதே சத்தியம் உணர்வேன் அனுதினம் பணியா திருப்பேனோ?
ஜெயம் உனக்கே ! மஹிஷாசுரன் வதம்புரி எழிற்குழல் சடையாள் மலைமகளே !
19)
தெள்ளிய நதியினில் நீரினைக் கொணர்ந்துஉன் தலத்தினைத் தூய்மையும் செய்வதனால்..
உள்ளம் குளிர்ந்துநீ காட்டிடும் கருணையில் உவகையும் பூத்திடச் செய்யாதோ ?
மங்கலம் யாவையும் தங்கிடும் சரஸ்வதி, தஞ்சமாய் உன்பதம் சேர்ந்தேனே !
ஜெயம் உனக்கே ! மஹிஷாசுரன் வதம்புரி எழிற்குழல் சடையாள் மலைமகளே !
20)
சந்திர திருமுகம் சத்தியம் நிர்மலம் ! துர்மலம் யாவையும் தகர்த்திடுமே !
இந்திர தேவியர் சந்திர மண்டலம் தேடுதலேனோ அறியேனே !
சுந்தரி உன்னருள் பெற்றதினால் தான் சங்கரன் சிவனையும் அறிந்தோமே !
ஜெயம் உனக்கே ! மஹிஷாசுரன் வதம்புரி எழிற்குழல் சடையாள் மலைமகளே !
21)
எளியவர்க் குவந்தருள் செய்திடும் உமையளே ! எனக்கருள் செய்திட வேண்டுமம்மா !
பொழிந்திடும் கருணை மழைபோல் பகைவரை கணைமழையாலே நனைப்பவளே !
துக்கமும் துயரமும் இருந்தது போதும் ! இக்கணம் வந்தே காத்திடம்மா !
ஜெயம் உனக்கே ! மஹிஷாசுரன் வதம்புரி எழிற்குழல் சடையாள் மலைமகளே !