psdprasad-music.com

புதிய தமிழ் பக்தி பாடல்கள் !

Experience the divine through sacred music and devotional lyrics

ஸ்ரீ கால பைரவர் அஷ்டகம்

🕉️ ஸ்ரீ காலபைரவர்
Translations

🎵 Watch/Listen on YouTube


 1)

தேவர்களின் தலைமகனாம் தேவேந் திரனும்..

   தொழுதுஅடி பணிகின்ற கமலமலர் பாதம் !

நாரதரும் முனிவர்களும் பாடுவதுன் நாமம் !

   முப்புரியாய் பூணுவதோ சீறிவரும் நாகம் !

கருணைமுகம் தாங்கும் சிரம் இளம்பிறையை சூடும் !

   காசி நகர் நாயகனே திகம்பரனே சரணம் !

 

2)

ஆயிரமாய் ஆதவன்போல் ஜொலிக்கும்திரு மேனி !

   மூவுலகும் காத்தருளும் திரிசூல பாணி !

மாயஉல கென்னும் கடல் தாண்டிவிடும் தோணி !

 வேண்டியவை தந்தருளும் நீலகண்ட ஞானி !

 ஆதி இலா அந்தமிலா முக்கண்ணனேநீ !

காசி நகர் நாயகனே நலமருள்வாய் சரணம் ! 

 

3)

சூலமுடன் பாசம், உடுக்கையுடன் மழுவும்

    ஏந்திய திருக்கரனே ! கரி வதன உருவே !

காலமெலாம் கடந்தவனே ! அண்டமிதன் முதலே !

  பீமபலம் கொண்டவனே ! பைரவனே ! ஈசா ! 

விந்தைமிகு தாண்டவத்தை விரும்பிடுமெம் நேசா !

    காசி நகர் நாயகனே நலமருள்வாய் சரணம் !

 

4)

 

இகபரத்து சுகம் கொடுத்து முக்தியையும் அளிக்கும்

   மங்கலமே கண்கவரும் உனதுஎழில் வதனம் !

அகமுவந்து அடியவரை அரவணைக்கும் உள்ளம் !

   ஆள்கிறதே ! லோகமெலாம் உன்னடியில் தஞ்சம் !

அரைஅணிந்த தங்கமணி இன்னிசையை வார்க்கும் !

     காசி நகர் நாயகனே நலமருள்வாய் சரணம் !

 

5)

 

தர்மவழி காப்பதுவே கடமையெனக் கொண்டோய் !

  அதர்மவழி அழிப்பவனே ! பைரவனே ! ஈசா !

கர்மவினை பயனறுத்து இன்பம்தரும் நேசா !

   காலமெலாம் நீதுணையே கருணைஉள தேவா !

பொன்அரவை மேனியிலே சுற்றிவலம் வருவோய்

   காசி நகர் நாயகனே நலமருள்வாய் சரணம் !

 

6)

 

அற்புதனே ! பைரவனே ! உனது எழில் பாதம்…

     ரத்தினங்கள் மின்னுகிற பாதுகைகள் சூடும் !

நிர்மலனே ! நிர்குணனே ! அந்தமிலா வடிவே !

  இஷ்டமுடன் நாம்பணியும் பைரவனே ! ஈசா !

காலபயம் நீக்கிடுவாய் கோர பற்களாலே ! 

   காசி நகர் நாயகனே நலமருள்வாய் சரணம் !

 

7)

 

இடிமுழக்க உன்சிரிப்பால் பிளந்து உடைபடுமே!

  தாமரையில் தோன்றுகிற அண்டகோ சங்கள் !

விழியதனில் பாவங்களை தீர்த்தருளும் தேவா !

   எட்டுவித சித்தி தரும் பைரவனே ! ஈசா !

கழுத்தினிலே மாலையென கபாலங்களை சூடும்

    காசி நகர் நாயகனே நலமருள்வாய் சரணம் !

 

8)

 

காசிநகர் மாந்தர்களின் பாவபுண்ய கணக்கை

   பார்ப்பவனே ! பூதகண கூட்டங்களின் நாதா !

நீதிவழி செல்வபவனே ! தொன்மைமிகு தேவா !

   அண்டமெலாம் செய்தவனே ! பைரவனே ! ஈசா !

அகண்ட புகழ் அதைய‌ருளும் ஆண்டவனே ! நேசா !

    காசி நகர் நாயகனே நலமருள்வாய் சரணம் !

 

9)

 

அகத்தினிலே இன்பமது மேலும் மேலும் பொங்கும் !

ஞானமுடன் முக்தியதும் சீக்கிரமே கூடும் !

சுகங்கள் எல்லாம் சேரும் ! சோதனைகள் தீரும் !

பைரவனின் அஷ்டகத்தை படிப்பவரின் வாழ்வில்

கால பைரவனின் திருவருளும் பூரணமாய் சேரும் !

பைரவனின் திருவருளும் பூரணமாய் சேரும் !