psdprasad-music.com

புதிய தமிழ் பக்தி பாடல்கள் !

Experience the divine through sacred music and devotional lyrics

ஸ்ரீ காமாட்சி ஸ்தோத்திரம் தமிழில்

🕉️ அம்பாள் / தேவி
Translations

🎵 Watch/Listen on YouTube


 

1)

 

கற்பக மலர்போல் மிளிர்பவளே !

  கமல மலர்கண்கள் கொண்டவளே !

அற்புத அணிகலன் பலவோடு

 அழகாய் மாலையும் பூண்டவளே !

கரியின் மத்தகம் போல்நகிலும்

  கரிய கூந்தலும் கொண்டவளே !

கலியின் பாவங்கள் தீர்த்திடவே

  காளி தேவியென வந்தவளே !

காஞ்சி மாநகர் நாயகியே !

  கருணை உளத்தாயே மங்கலமே !

 

Chorus:

ஈசன் சிவனார் அன்பினளே !

  காமாட்சி தாயே வணங்குகிறேன் ! (2)

 

2)

 

சுந்தர நிலவாய் ஒளிர்பவளே !

  புல்லின் நிறக்கிளி கொண்டவளே !

சந்திர, சூரியர், அக்னியினை

  கண்கள் மூன்றாய்க் கொண்டவளே !

வாரண ராஜனைப் போலான

  தோரணை காட்டும் தேவியளே !

நாரணன், இந்திரன், தேவர்களும்

  நாடியே உன்பதம் தொழுவாரே !

சூடும் அணிகலன் ஜொலிப்பாலே

  மேலும் மிகையாய் மிளிர்பவளே!

 

Chorus:

ஈசன் சிவனார் அன்பினளே !

  காமாட்சி தாயே வணங்குகிறேன் ! (2)

 

3)

 

உள்ளக் குகையில் உனைவைத்து

   உருகித் தொழுவார் மாமுனியோர் !

தெள்ளிய மெய்ப்பொருள் உன்னுருவை

   ஐம்க்லீம் சௌஎனும் மந்திரத்தால் !

செப்பிடும் வாக்கின் அதிபதியே!

  செம் பருத்திபூ நிறத்தவளே !

நெற்றியில் திருக்கண் கொண்டவளே !

  நலமருள் பாலா அம்பிகையே!

சுழுமுனை நாடியில் உறைபவளே !

  சுந்தர மாலைகள் தரித்தவளே !

 

Chorus:

ஈசன் சிவனார் அன்பினளே !

  காமாட்சி தாயே வணங்குகிறேன் ! (2)

 

4)

 

உந்தன் மலர்பதத் துகள்கொண்டே

  உலகினை படைப்பார் நான்முகனும் !

சிந்திடும் உன்னருட் கருணையினால்

  திருமால் உலகைக் காப்பாரே !

மாயை நிறைந்த உலகிதனை

  முடித்து வைப்பாரே ருத்திரனும்

தாயே ! உந்தன் துணையால்தான்..

  தன்தொழில் செய்வார் மூவருமே !

அழகாய் விதவித லீலைகளாய்

  திருவிளையாடல் செய்பவளே !

 

Chorus:

ஈசன் சிவனார் அன்பினளே !

  காமாட்சி தாயே வணங்குகிறேன் ! (2)

 

5)

 

மெல்லிய ததிலும் மெல்லியதாம்

  உந்தன் வடிவின் சாராம்சம் !

வல்லிய அரக்கரை மென்படுத்தும் !

  மூவுல குக்கும் அமைதிதரும் !

சீரிய த்யானங்கள் செய்வார்க்கு

  சீக்கிர மாக உணர்வாகும் !

நேரிடும் நிகழ்வுகள் சாட்சியென

  தட்சன் மகளுனைத் தான்காட்டும் !

தெய்வத் திருவிளை யாடல்கள்

  நடத்திடும் மங்கல மானவளே !

 

Chorus:

ஈசன் சிவனார் அன்பினளே !

  காமாட்சி தாயே வணங்குகிறேன் ! (2)

 

6)

 

உபநிட தத்தின் மலைமாடம்

  அதில்நீ தீபம் ஓங்காரம் !

உலகிதன் ஆன்மா விளக்காகும் !

  மறைகள் நான்கின் ஒளியாகும் !

காஞ்சி நகரெனும் கூண்டினிலே

  கிளியைப் போலே நீயம்மா !

வாஞ்சை மிகுந்த எம்தாயே..

 கருணை அலையினை வார்ப்பவளே !

காமேஸ் வரனின் மகராணி !

 பாவம் தீர்க்கும் மலைமகளே !

 

Chorus:

ஈசன் சிவனார் அன்பினளே !

  காமாட்சி தாயே வணங்குகிறேன் ! (2)

 

7)

 

உவந்துன் மந்திரம் ஹ்ரீம்தன்னை

 உச்சரி த்தாலே சௌபாக்யம் !

புவனேஸ் வரியாய் உலகிற்கே

  உணவை அளிப்பாய் அனுதினமும் !

ஜகத்தினைத் தாங்கும் அன்னையளே !

  பரம்பொருள் ஆனத் தூயவளே !

முகமோ அழகாய் ஒளிர்கின்ற

  முழு நிலவாகக் கொண்டவளே !

கூடிய பாவங்கள் தீர்ப்பவளே !

  மாசிலா மணியே ! எம்தாயே !

 

Chorus:

ஈசன் சிவனார் அன்பினளே !

  காமாட்சி தாயே வணங்குகிறேன் ! (2)

 

8)

 

வாக்கின் அதிபதி கலைமகளாய்

  வாழ்த்தி டுவாருனை முனியோர்கள் !

பாற்கடல் தோன்றிய திருமகளாய்

  பாடிடு வார்கள் மற்றோர்கள் !

நலமருள் மலைமகள் என்றுன்னை

  நன்றாய் போற்றும் அருமறைகள் !

பலபல வடிவம் கொண்டாலும்

  கருணை மாறாத் தாயவளே !

வாட்டும் இன்னல்கள் தனைதீர்த்து

  வகைவகை பலன்கள் தருபவளே !

 

Chorus:

ஈசன் சிவனார் அன்பினளே !

  காமாட்சி தாயே வணங்குகிறேன் ! (2)

 

9)

 

பேரானந்தத் தேன் ஊறும்

  உறைவிடம் கொண்டாய் அன்னையளே !

சீரார், கற்றோர் அவரேற்றும்

  சீரிய ஞானப் பரம்பொருளே !

மாயை என்பதன் ஆதியளே!

   மூவுல கும்தொழும் மலர்பதமே!

மாயையால் மனிதராய் உருக்கொண்டு

  மணிரத் தினமாய் ஜொலிப்பவளே !

ராஜ யானையைப் போலானக்

  கம்பீர நடையைக் கொண்டவளே

 

Chorus:

ஈசன் சிவனார் அன்பினளே !

  காமாட்சி தாயே வணங்குகிறேன் ! (2)

 

10)

 

அம்பா ! மங்கல காமாட்சி !

  அன்புடன் பக்தருக் கருள்பவளே !

கம்பா நதியின் கரையோரம்

  மாமரத் தடிஉறை கருணையளே !

ஈசன் மேனியில் பாதியென

  இடபா கத்தைக் கொண்டவளே !

வாசம் வீசும் கஸ்தூரி

  தேகம் முழுதுமாய் மணப்பவளே !

வீரக் களிறுபோல்

நகர்பவளே !

  காம தேனுபோல் தருபவளே !

Chorus:

மங்கலம் பொங்கும் ஆனந்தம்

  எந்தன் வாழ்வில் தாருமம்மா ! (2)

  எந்தன் வாழ்வில் தாருமம்மா !