ஸ்ரீ வைத்யநாத அஷ்டகம்
1)
ஸ்ரீராமன், அறுமுகனும்,
செவ்வாயும், சூரியனும்
ஜடாயு, நான்மறையும்
பணிந்தேற்றும் தேவே !
காருண்ய குணத்தானே !
திருநீல கண்டா !
ஸ்ரீ வைத்யநாதனே ! நம:சிவாய !
2)
சடைமுடியில் கங்கையையும்
பிறைநிலவும் கொண்டாய் !
காமனையும், காலனையும்
வென்ற முக்கண்ணா !
தேவரெலாம் தொழுகின்ற
தேவாதி தேவே !
ஸ்ரீ வைத்யநாதனே ! நம:சிவாய !
3)
திரிசூலம் கரமேந்தும்..
த்ரிபுர சம்ஹாரா !
அடியாரின் அருளாளா !
அல்லாரை அழிப்பாய் !
புவியுலகில் தீராத
விளையாடல் செய்வாய் !
ஸ்ரீ வைத்யநாதனே ! நம:சிவாய !
4)
சூரியனும், சந்திரனும்
அக்னியும் உன்கண்கள் !
வீரியமாய் வருகின்ற
வாதம், பிற நோய்கள்..
அவையாவும் தீர்த்தருள்வாய் !
முனியோர்கள் பணியும்…
ஸ்ரீ வைத்யநாதனே ! நம:சிவாய !
5)
குருடர்க்கும், செவிடர்க்கும்
வாய்பேச முடியார்க்கும்
அருள்செய்து நீதானே
குறைநீக்கி வைப்பாய் !
தீராத தொழுநோயும்
உனைத்தொழவே தீர்ப்பாய் !
ஸ்ரீ வைத்யநாதனே ! நம:சிவாய !
6)
வேதாந்தப் பொருளோனே !
மும்மூர்த்தி வடிவே !
பாதாரம் பணிவாரே
யோகியர்கள் எல்லாம் !
ஆயிரமாய் பெயர்கொண்டாய் !
எங்கெங்கும் நிறைந்தாய் !
ஸ்ரீ வைத்யநாதனே ! நம:சிவாய !
7)
திருதீர்த்த நீராலே
திரு நீறினாலே
திருக்குளத்து மண்ணாலே
துயர்தீர்த்துக் காப்பாய் !
தீவினை பயம்நீக்கும்
பரமாத்ம ரூபா !
ஸ்ரீ வைத்யநாதனே ! நம:சிவாய !
8)
சந்தனம், திருச்சாம்பல்,
மலர்சூழ மணப்பாய் !
சந்தானம், சௌபாக்யம்
அடியார்க்கு அருள்வாய் !
கழுத்தோடு கருநீலம்..
கொடியோடு காளை..
ஸ்ரீ வைத்யநாதனே ! நம:சிவாய !
துதியிதனை தினந்தோறும்
மும்முறையாய் படித்தால்
பாலாம்பாள் உடனுறையும்
ஸ்ரீவைத்ய நாதன்
அருளாலே நோய்தீரும் !
பயம்யாவும் தீரும் !