வாராகி தாலாட்டு

ஆராதித்தோம் உன்னை….வாராகித் தாயே !
மாறாத உன்னருளை நாளெல்லாம் அனுக்ரஹித்து
ஓயாதோ உன்மேனி..ஓங்கார ரூபிணியே! (2)
ஓய்வெடுக்க வேண்டுமம்மா தாலேலோ…!
தாலேலோ…!
பார் போற்றும் அம்பிகையின் போர்படையின் அதிபதியே !
போர் செய்து எதிரியரை வேரறுக்கும் பார்வதியே !
போர் செய்த களைப்பிருக்கும்…பூமேனி பூரணியே ! (2)
போதும் இந்த வேகம் அம்மா ! தாலேலோ…
தாலேலோ….ஓ….
வாராக மூர்த்தியென வடிவாகி வந்தவராம்..
நாராயணனுக்கே ஆதாரமாய் நின்றவளே !
தீராத ஆற்றலினைத் தானாகத் தந்தவளே ! (2)
கூரான…விழியடங்க…தாலேலோ…
தாலேலோ….ஓ….
ஏழான கன்னியரில் மேலான தேவதையே !
ஈடாக யாருமில்லா வாராகி தேவியளே !
கோடான கோடியிலே பக்தர்குறை தீர்த்தவளே ! (2)
வாடாதோ வடிவழகு தாலேலோ…
தாலேலோ..
ஏராள திரவியத்தால் நீராடல் செய்திடுவோம் !
பூவாரம் பலவிதமாய் நெஞ்சார.. சார்த்திடுவோம் !
பூபாள வேளையிலே…பாமாலை சூட்டிடுவோம் !
கண்வளர்வாய் இப்போது…தாலேலோ…(2)
தாலேலோ…