psdprasad-music.com

புதிய தமிழ் பக்தி பாடல்கள் !

Experience the divine through sacred music and devotional lyrics

அஷ்டலட்சுமி ஸ்தோத்திரம் – தமிழில்

🕉️ ஸ்ரீ மகாலட்சுமி
Translations

🎵 Watch/Listen on YouTube


1)
உத்தமர் தொழுதிடும்  சுந்தரி, மாதவி !
சந்திரன் சோதரி பொன்மயமே !
செப்பிடும் தேன்மொழி முக்தியைத் தந்திடும்
மறைகளும், முனிவரும் பணிபவளே !
அமரரும் போற்றிட மலரினில் அமர்ந்தவள்
நிமலநல் குணமருள்  நாயகியே !
ஜெய ஜெய ஹே மதுசூதனன் மனம்கவர் ஆதி லட்சுமியே காத்திடம்மா !

2)

மந்திரசொல் உறை மந்திர வடிவினள்
மறைகளின் உருவினள் காமினியே !
மங்கல வடிவினள், பாற்கடல் திருமகள்
கலியுக தோஷங்கள் தீர்ப்பவளே !
மங்களம் அளிப்பவள், மலரினில் உறைபவள்
தேவகணம் தொழும் திருவடியே !
ஜெய ஜெய ஹே மதுசூதனன் மனம்கவர் தான்ய லட்சுமியே காத்திடம்மா !

3)

வெற்றியைத் தந்திடும் வைஷ்ணவி தேவியே !
சட்டென வரம்தரும் பார்கவியே !
முற்றிய ஞானத்தை அருளிடும் மந்தரி
சாஸ்திரம் போற்றிடும் சாம்பவியே !
பவபயம் தீர்ப்பவள், பாவம் அழிப்பவள்
பணிபவர்க் கபயம் அளிப்பவளே !
ஜெய ஜெய ஹே மதுசூதனன் மனம்கவர் தைரிய லட்சுமியே காத்திடம்மா !

4)
வாரணத் தேரினில் பெரும்படை சூழ்ந்திட
தோரணை காட்டியே வருபவளே !
தாரணி போற்றிட வேண்டிடும் வரமுடன்
துர்கதி நீக்கி அருள்பவளே !
நாரணன், நான்முகன், ஈசனும் பணிபவள்
தாபங்கள் தீர்த்துக் காப்பவளே !
ஜெய ஜெய ஹே மதுசூதனன் மனம்கவர் ஸ்ரீகஜ லட்சுமியே காத்திடம்மா  !

5)
ஞானத்தின் வடிவினள், வானத்தில் பறப்பவள் !
லோகத்தில் க்ஷேமத்தை செய்பவளே !
கானங்கள் போற்றிடும் குணக்கடல் ஆனவள்
கரத்தினில் சக்கரம் கொண்டவளே !
அமரரும், அசுரரும், முனிவரும், மனிதரும்
சகலரும் வணங்கிடும் திருவடியே !
ஜெய ஜெய ஹே மதுசூதனன் மனம்கவர் சந்தான லட்சுமியே காத்திடம்மா  !
6)

அர்ச்சனை குங்குமம் நெற்றியில் கொண்டவள் !
சத்கதி தந்திடும் சுந்தரியே !
பற்பல வாத்யங்கள், பாடல்கள் முழங்கிட
பொற்பதம் மலரினில் வைத்தவளே !
அற்புத ஸ்தோத்திரம் கனகதாராவால்
ஆதி சங்கரர் புகழ்ந்தவளே !
ஜெய ஜெய ஹே மதுசூதனன் மனம்கவர் விஜய லட்சுமியே காத்திடம்மா  !

7)
மலைமகள், கலைமகள் வணங்கிடும் அலைமகள்
மணிமிகும் குண்டலம் தரித்தவளே !
நிலைத்திடும் அமைதியில் புன்னகை முகத்தினள்
துரத்திடும் சோகம் தீர்ப்பவளே !
வரமருள் கரத்தினள், நவநிதி அளிப்பவள்
கலியுக பாவங்கள் அழிப்பவளே !
ஜெய ஜெய ஹே மதுசூதனன் மனம்கவர் வித்யா லட்சுமியே காத்திடம்மா  !

8)
திமிதிமி திம்திமி திம்திமி திம்திமி
துந்துபி நாதத்தை ரசிப்பவளே !
குமகும கும்கும கும்கும கும்கும
சங்கத்தில் ஓசையில் மகிழ்பவளே !
வேத புராணங்கள் புகழ்ந்திடும் தேவியள்
நல்வழி காட்டிடும் திருமகளே  !
ஜெய ஜெய ஹே மதுசூதனன் மனம்கவர் ஸ்ரீதன லட்சுமியே காத்திடம்மா  !