கருப்பண்ண சாமி !

கருப்பண்ண சாமி !

கருப்பு நிறத் தோற்றத்தில
வெள்ள மனசுக் காரன் !
கரும் இருட்டு நேரத்தில
காவலாகும் வீரன் ! (2)

வாட்ட சாட்டம் உயரத்தோடு
மிடுக்கு மீசைக்காரன் !
கோட்டையாளும் ஐயனுக்கு
தோழன் பாசக்காரன் !

கோரஸ்:
கருப்பண்ண சாமி ! நம்ம
கருப்பண்ண சாமி !

சாட்டையத சுழட்டிகிட்டு
சூர வேட்டை ஆடுவான் !
மாட்டிகிட்ட ஏவல், பிணி
மாயும்படி செய்யுவான் ! (2)
காட்டு வழி தாண்டிவரும்
பக்தர்துணை ஆகுவான் !
பாட்டுபாடி கால்சலங்கை
குலுங்கிடவே ஆடுவான் !

கோரஸ்:
கருப்பண்ண சாமி ! நம்ம
கருப்பண்ண சாமி !

நெத்தியில திருநீறு
பக்தியோடு பூசுவான் !
சுத்தி கட்டும் கச்சையில
சூரியன்போல் கூசுவான் ! (2)
பொல்லாங்கு பாத்துபுட்டா
வீச்சறுவா வீசுவான் !
சாஸ்தாவின் காலடியில்
சரணம் சொல்லி பேசுவான் ! (2)

கோரஸ்:
கருப்பண்ண சாமி ! நம்ம
கருப்பண்ண சாமி !